விக்னேஷ் இயக்கும் புதிய படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடிகர் சீமான் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா அறிவித்து, பின்னர் அது கைவிடப்பட்டது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் திகதி சென்னையில் நடைபெற்றது.
இப்படத்துக்கு ‘எல்ஐசி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ’மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றதாகவும், இதில் விவசாயி கதாபாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமீபகாலமாக சீமான் தாடியுடன் இருப்பதற்கு காரணம் இந்தப்படத்தின் கதாபாத்திர தோற்றம் தான் எனவும் கூறப்படுகிறது.