மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி விவகாரம் காதலன் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்கள் மன்னார் கோந்தைப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய யுவதியின் சடலம் தொடர்பான விசாரணையில், புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த யுவதியுடன் இறுதியாக காணப்பட்ட ஆண் நண்பர் பொலிசில் முன்னிலையாகி பல தகவல்களை வெளியிட்டுள்ளார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் கடந்த சனிக்கிழமை (13) காலை யுவதியொருவரின் சடலம் கரையொதுங்கியது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (22) என்பவரது சடலம் அதுவென்பது அடையாளம் காணப்பட்டது.
தற்போது, மன்னார் மூன்றாம் பிட்டி பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வந்த அவர், கடந்த இரண்டு மாத காலமாக மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.
தந்தை சிறு வயதிலே மரணித்த நிலையில் தாயின் பராமரிப்பில் குறித்த யுவதி மற்றும் இரு சகோதரர்கள் இருந்துள்ளனர்.
தாய் பல்வேறு கூலி தொழில் ஈடுபட்டு கிடைத்த வருவனத்திலே மூவரையும் பராமரித்து வந்துள்ளார்.
யுவதி உறவினர் ஒருவருடன் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (11) பணி முடிவடைந்த பின்னர் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு ஆண் நண்பர் ஒருவருடன் நடந்து வரும் சிசிரிவி காணொளி பதிவுகள் வெளியாகியிருந்தன. அந்த ஆண் யார் என பொலிசார் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையில், யுவதி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரிய வந்தது.
வியாழக்கிழமை மாலை மன்னார் பாலத்தில் யுவதி தனித்து நின்றதையும், துப்பட்டாவை இடுப்பில் கட்டியதையும் மீனவர் ஒருவர் அவதானித்திருந்தார். பின்னர் கடலில் விழுந்த சத்தம் கேட்டு, மன்னார் பொலிசாருக்கு தகவல் வழங்கியிருந்தார்.
கடற்படையினருடன் உதவியுடன் அன்று தேடுதல் நடத்தப்பட்ட போதும், பலனிருக்கவில்லை.
சனிக்கிழமை பாலத்திற்கு அண்மித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியானதையடுத்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில், யுவதியுடன் இறுதியாக காணப்பட்ட ஆண் நண்பர், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி, பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இருவரும் காதலித்து வந்த நிலையில், பிறிதொரு விவகாரத்தால் காதலன் அதிருப்தியடைந்திருந்தார். இது குறித்த சர்ச்சை அவர்களிற்குள் நீடித்து வந்த நிலையில், 11ஆம் திகதி மாலையில் மன்னார் பேருந்து நிலையத்தில் சந்தித்த போதும், இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த சர்ச்சையின் போது, யுவதியின் கைத்தொலைபேசியை காதலன் பறித்தெடுத்துள்ளார்.
இதன்பின்னரே, யுவதி மன்னார் பாலத்திற்கு சென்று, குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையான இளைஞன், யுவதியிடமிருந்து பறித்தெடுத்த கைத்தொலைபேசியை ஒப்படைத்து, சர்ச்சைக்கு ஆதாரமாக அதிலிருந்த தகவல்களையும் பொலிசாரிடம் காண்பித்துள்ளார்.
கைத்தொலைபேசி பொலிசாரின் பொறுப்பில் உள்ளது. இளைஞனிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.