திருகோணமலை மாவட்டம், சேருவில – தங்கநகர் யுவதியின் படுகொலை தொடர்பான வழக்கு இன்றையதினம் (02-08-2024) மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேக நபர்கள் 7 பேரையும் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள் 3ஆம், 6ஆம் எதிரிகளுக்கு பிணை விண்ணப்பம்கோரி சமர்ப்பணம் செய்திருந்தனர்.
குறித்த விண்ணப்பத்தை நிராகரித்த நீதிபதி, குறித்த எதிரிகள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை எனவும் பிணை விண்ணப்பமானது உயர் நீதிமன்றத்தினாலேயே பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்து பிணை விண்ணப்பத்தினை நிராகரித்து சந்தேக நபர்களுக்கு மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கநகரைச் சேர்ந்த 25 வயதான இளம் பெண்ணின் சடலம் கிளிவெட்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமாகவுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த யூலை மாதம் 5ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது.இவ்வாறான நிலையில் குறித்த பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் குறித்த யுவதியின் காதலன், அவரது தந்தை, சகோதரி, சிறிய தந்தை, வீட்டு வேலைக்காரன் மற்றும் ஜே.சி.பி வாகனத்துடன் தொடர்புடைய இருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.