கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரியில் வெள்ளிக்கிழமையன்று (23) இரவு தனது மாமியரை வெட்டிக் கொன்ற மருமகன் தலைமறைவாகியுள்ளார், வாகனேரி, கூழாவடிச்சேனையைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயான வை.கோமளம் (48) என்பவரே கூரிய ஆயுதத்தினால் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
தனது மாமனாரை குத்திக் கொன்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மருமகன், கடந்த சுதந்திரதினத்தில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையாகிய 1 வாரத்தில் மாமியாரையும் கொன்றுள்ளார்.
9 வருடங்களின் முன்னர் தனது மாமனாரின் தலையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்து, சிறைத்தண்டனை விதித்தது. சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மருமகன், கடந்த சுதந்திரதினத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.
தனது தந்தையை கொன்ற கணவனுடனான தொடர்பை மனைவி துண்டித்து விட்டார். அந்த தம்பதிக்கு 2 ஆண் பிள்ளைகள். அவர்களை பராமரிப்பதற்காக மனைவி மத்திய கிழக்கு நாடொன்றுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
பெப்ரவரி 4 சுதந்திரதினத்தையொட்டி விடுதலையான கொலையாளி, வீட்டுக்கு வந்த போதும், மனைவி அவருடன் தொலைபேசியில் பேசவில்லை. மனைவியுடன் சமரசம் ஏற்படுத்துமாறு, மனைவியின் தாயாரிடம் கேட்டுள்ளார். ஆனால் மனைவி தனது நிலைப்பாட்டில் மாற்றமேற்படுத்தவில்லை
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வீட்டுக்கு வந்த கணவன், பிள்ளைகளுக்கு உணவளித்து அறைக்குள் அனுப்புமாறு மாமியாருக்கு கூறியுள்ளார். இதன்படி, மாமியாரும் செயற்பட்டுள்ளார்.
“உனது மகளுடன் கடைசியாக ஒருமுறை பேசு“ என மாமியாருக்கு கூறியுள்ளார். மாமியார் தொலைபேசியில் மகளுக்கு அழைப்பேற்படுத்தி பேச ஆரம்பிக்க, கூரிய ஆயுதத்தினால் மாமியாரின் கழுத்தை வெட்டிக் கொன்றுள்ளார்.
கொலை செய்ததும், காட்டுக்குள் தப்பியோடி விட்டார். அவரை பொலிசார் தேடி வருகிறார்கள்.