நாட்டிலுள்ள சட்ட வரையறைகளை மீறி செயற்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பிரதி அமைச்சராக நேற்றையதினம் (26) சுனில் வட்டகல தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
சட்டவிரோத செயற்பாடுகள்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சட்டங்களை எவரும் முறையற்ற விதத்தில் பயன்படுத்த அனுமதி இல்லை. நாட்டின் சட்டங்களை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். நாட்டை அழிக்கும் பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் என்பவற்றை முற்றாக ஒழிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையதாகும்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட பலவீனமே கடந்த காலங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்ததில் செல்வாக்கு செலுத்தியது. நாட்டில் போதியளவு சட்டங்கள் நடைமுறையிலுள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன.
அது மாத்திரமின்றி சட்டங்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. போதைப்பொருளை ஒழிப்பதற்கு அரசியல் ரீதியில் காணப்பட்ட தடைகள் தற்போது நீங்கியுள்ளன.
எனவே, இனியும் நாட்டில் சட்டவிரோத போதைப்பொருட்கள் இவ்வாறான காரணிகளால் கைப்பற்றப்படவில்லை எனக் காரணம் கூற முடியாது. அப்பாவி மக்களுக்கு நியாயத்தை வழங்க முடியவில்லை எனில் நாம் பதவிகளை வகிப்பதில் எந்த பலனும் இல்லை” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.