உயர்நீதிமன்ற உத்தரவிற்கமைய, பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட தேஷபந்து தென்னகோன் கடந்த வாரம் இரகசியமாக வெளிநாடு சென்றுள்ளதாக தென்னிங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளப் வசந்தவின் கொலையுடன் பாதாள உலக போரை உருவாக்கிவிட்டதாக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதன் பின்னணியில் தேசபந்து தென்னகோன் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவரை ஜனாதிபதி தேர்தல் வரை பொலிஸ் மா அதிபர் பதவியில் வைத்திருக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பலத்த முயற்சிகளை மேற்கொண்டதாக தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டு பயணம்
இந்நிலையில் தேசபந்து தென்னகோன் திடீரென வெளிநாடு சென்றுள்ளமை தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதேவேளை, கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலைச் சம்பவம் தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடம் நடத்திய விசாரணையில், குறித்த தாக்குதலை நடத்த வந்த மற்றைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த எந்தத் தகவலும் அவருக்குத் தெரியாது என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட தினத்தில் தான் தமக்கு தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தெரிவித்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு
எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், அவர்களுக்கு மறைந்திருக்க பாதுகாப்பு வழங்கிய மேலும் பலர் தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, இது தொடர்பான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மேலும் சில சந்தேக நபர்களும் கைது செய்யப்பட உள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபருடன் கைது செய்யப்பட்ட மற்ற இரு சந்தேக நபர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.