ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாட்டிலுள்ள ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பள உயர்வுடன் வாழ்க்கைச் செலவுப் படியும் 25,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் உறுதிமொழி வழங்கிவரும் வேளையில் நாட்டிலுள்ள சின்னஞ்சிறார்களுக்கு அடிப்படைக் கல்வியை வழங்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புப் பற்றியோ ஒரு சம்பளக் கட்டமைப்புப் பற்றியோ எவரும் கவனம் செலுத்தவில்லை என முன்பள்ளி ஆசிரியர்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டிலுள்ள சிறார்களுக்கு ஆரம்ப அடிப்படைக் கல்வியை வழங்குவதில் முன்பள்ளி ஆசிரியர்கள் மிகமுக்கியமானவர்களாகக் காணப்படுகின்றபோதிலும் அவர்களை இலங்கை அரசு கருத்தில் எடுத்து அவர்களுக்கான ஒரு சம்பளக் கட்டமைப்பை உருவாக்கி நாட்டிலுள்ள சிறார்களுக்கு ஆரம்ப அடிப்படைக் கல்வியை வழங்குவதற்கான பொறுப்பற்ற நிலை காணப்படுவதாகவும் தற்போதுவரை முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக வெறும் மூவாயிரம் (3,000) ரூபா மட்டுமே வழங்கப்பட்டுவருவதாகவும் பாதிக்கப்பட்டுள்ள முன்பள்ளி ஆசிரியர்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு (2,500) ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டமையும் ஏனைய ஊழியர்கள் போன்று தாமும் தினந்தோறும் முழுநேரப் பணியிலீடுபடுவதாகவும் தமக்கான சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு ஜனாதிபதியிடம் முன்பள்ளி ஆசிரியர்கள் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களுக்க ஆகக் குறைந்த அடிப்படைச் சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு அதனுடன் வாழ்க்கைச் செலவுப் படியும் 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு வழங்கப்படவுள்ள நிலையில் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் தமக்கு வெறும் இரண்டாயிரத்து ஐந்நூறு (2,500) ரூபாய் மட்டுமே அதிகரிக்கப்படும் என ஜனாதிபதியால் குறிப்பிடப்படுவது என்ன வகையில் நியாயம் எனவும் பாதிக்கப்பட்டுள்ள முன்பள்ளி ஆசிரியர்களால்க் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களது தபால் மூல வாக்கை இலக்கு வைத்து ஜனாதிபதி வேட்பாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட்டவர்கள் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புப் பற்றி பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கிவரும் அதேவேளை நாட்டிலுள்ள சிறார்களுக்கான ஆரம்ப அடிப்படைக் கல்வியை வழங்கும் மிகமுக்கிய செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அதேவேளை மிகமிகக் குறைந்த வேதனமான வெறும் 3,000 ரூபாவை மாத்திர்பெற்று பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் வேததன அதிகரிப்புப் பற்றியோ அவர்களுக்கான சம்பள கட்டமைப்புப் பற்றியோ எதுவும் கூறப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.