கொரோனா பேரிடர் காலத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 4000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுபோல, ரேஷன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க உத்தரவிடக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையான கிரேஸ்பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குடும்ப அட்டை வைத்திருக்கும் 2,596 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு அரசின் ரூ.4000 நிதியுதவியின் முதல் தவணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குடும்ப அட்டை இல்லாத 8,493 மூன்றாம் பாலினத்தவருக்காக, மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம் மூலமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், தடுப்பூசி செலுத்துவதில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.